Sunday, October 26, 2008

தமிழர்களுக்கும் ஈழ தமிழர்களுக்கும் ஒரு பகிரங்க கடிதம்

என் அன்பு ஈழ தமிழர்களே(தமிழகத்திலும், ஈழத்திலும் மற்றும் உலகெங்கிலும்),

ஈழத்தில் அமைதி திரும்பிட, அம்மக்களின் வாழ்வு செழித்திட விரும்பும் ஒரு தென் தமிழக தமிழன்.

சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் தாய்நாடு இந்தியா. சுதந்திரத்திற்கு பின் வல்லபாய் பட்டேல் பல சிற்றரசுகளை ஒருகிணைத்து இந்தியா எனும் தேசம் மலர்ந்தது. எம்மக்கள் இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறோம். இந்தியாவை நேசிக்கிறோம். அறுபது வருடங்கள் ஆகியும் அரசியல்வாதிகள் தவிர்த்து எங்கள் நாட்டில் பலர் வளர்ச்சி அடையாமல் வளரும் நாடாகவே இருக்கிறோம். எங்களால் உள்நாட்டில் இருக்கும் நதிநீர் முதல் உள்ளும் வெளியும் இருக்கும் தீவிரவாத அச்சறுத்தல் மற்றும் அண்டை நாடுகளுடனான பிரச்சனை கூட தீர்த்து கொள்ள முடியாது. எம்மீனவர்களை சுட்டு கொள்ளும் இலங்கை கடற்படையினரை கூட நாங்கள் கேள்வி கேட்பதில்லை.

இலங்கையின் இப்போதைய அரசு, உலக நாடுகளால் ஒத்துகொள்ளபடும் ஒரு அரசு. தேர்தல் மூலம் அரசாங்கத்திற்கு வந்த ஒரு அரசு. விடுதலை புலிகள் உலக நாடுகளால் ஒரு தீவிரவாத கூட்டம் எனப்படுகிறது. விடுதலை புலிகளை ஈழ மக்களின் ரட்சகனாக நினைக்கலாம். ஆனால் எம் தமிழகத்தில் எம் நாட்டின் பிரதமரை கொன்றது விடுதலை புலிகள். எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு. (ஒசாமா நடத்திய செப் 11 தாக்குதல் போலானது அல்லது அதற்கும் மேலானது. ஒசாமா நடத்துவது புனித போர் என்று ஒசாமா சொல்கிறார்.) விடுதலை புலிகள் பற்றி வரும் செய்திகள் வருத்தமடைய செய்கின்றன. அப்பாவி தமிழ் மக்களை மனித கேடையமாகவும், தற்கொலை படைக்கு சிறுவர்களை தயார் செய்வதாகவும், இருட்டறை கொடுமைகள், போன்ற பல செய்திகள் அவநம்பிக்கையாய் இருக்கின்றன.

நாங்கள் எங்கள் நாட்டில் நக்சலைட்டுகளையும், தீவிரவாதிகளையும் ஒடுக்க முயற்சிக்கிறோம். அதுபோல் விடுதலை புலிகளை, இலங்கை அரசு ஒடுக்க நினைப்பதை ஒடுக்க முயற்சிப்பதை நாங்கள் தவறென்று சொல்லமுடியாது. அதை தடுத்து நிறுத்தும்படி கேட்டு உங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது. ஆனால் இலங்கை அரசாங்கம் என் ரத்தத்தின் ரத்தமாகிய ஈழ தமிழரை கொன்று குவிக்கிறது. விடுதலை புலிகளை ஒடுக்கும் முயற்சியில். விடுதலை புலிகளை ஒடுக்கும் போர்வையில்.

இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். அண்டை நாடு என்ற முறையில் இந்தியா வருத்தங்களையும் கண்டனங்களையும் தெரிவிக்கிறது. எம் தமிழ் மக்கள், உங்கள் நாட்டு அரசாங்கத்திற்கு ராணுவ உதவிகள் செய்ய கூடாது என்று இந்திய அரசாங்கத்திற்கு சொல்லிவருகிறோம். இதையும் ஒத்து கொள்கிறேன். எம் தமிழ் அரசியல்வாதிகளும், எம் தமிழ் திரைப்பட துறையினரும், ஈழ தமிழர் பிரச்சனையை அரசியலாக்கி கொண்டு இருக்கின்றனர், வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக.

ஈழ பிரச்சினையில் இந்தியாவின் நிலை இதுதான். இந்தியா அரசு, அங்கிகரிக்கப்பட்ட தீவிரவாத இயக்கமான விடுதலை புலிகளை ஆதரிக்காது. இலங்கை அரசுக்கு இந்தியா அரசு ராணுவ உதவிகளை நிறுத்தினாலும், சீன மற்றும் இன்னபிற அரசுகள் ராணுவ உதவிகளை தொடர்ந்து செய்யும். எம் தமிழக அரசியல்வாதிகளோ ஈழ தமிழர்களை கொண்டு நன்கு அரசியல் ஆதாயம் தேடுவர். என்னை போன்ற சாதரண மனிதர்கள் ஈழ தமிழர்களுக்காக கண்ணீர் வடிப்பார், வருந்துவார். இதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

உங்கள் நாட்டில் பெட்ரோல் இருந்திருந்தால் அமெரிக்கா உங்கள் நாட்டின் மீது படையெடுத்து, இலங்கையின் அரசை நிர்மூலமாக்கி இருக்கும். ஐ. நா சபை வழக்கம் போல் எதுவும் செய்யாது. அமெரிக்காவின் கைப்பாவை அது. என் இந்தியாவின் அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்யவே நேரம் இல்லை. உலகமே பொருளாதார பின்னடைவில் சிக்கி திணறுகிறது.


என் அன்பு தமிழர்களே, ஈழ தமிழர்களே(தமிழகத்திலும், ஈழத்திலும் மற்றும் உலகெங்கிலும்),

இங்கு இந்த தமிழ் வலைபதிவுகலத்தில், பல தமிழர்கள், பல ஈழதமிழர்கள், சண்டை போட்டு தீர்க்கிறார்கள். சிலர் இந்தியாவை எள்ளி நகையாடுகிறார்கள். சிலர் அரசியல்வாதிகளை திட்டி தீர்க்கிறார்கள். சிலர் சோனியா பக்கம், சிலர் அத்வானி பக்கம், சிலர் கலைஞர் பக்கம், சிலர் ஜெ பக்கம், சிலர் வைக்கோ பக்கம், சீமான், அமீர் கைது அரசியல். சிலர் அஜித்தையும் அர்ஜுனையும் போட்டு வறுக்கிறார்கள். இவர்களால் ஒன்றுமே நடக்கப் போவதில்லை. எல்லாம் அரசியல் மட்டுமே. வெறும் கபட அரசியல்.

தயவு செய்து இந்த கலைஞரின் ராஜதந்திரம். ஜெ அரசியல் செய்கிறார். ராமேஸ்வரத்திற்கு அவர் வரவில்லை. மனித சங்கிலியில் இவர் கலந்துகொள்ளவில்லை. சத்தியராஜ் அழுவுகிறார். ஏகனை புறக்கணியுங்கள். இந்தமாதிரி பதிவு போடுவதற்கு பதில், ஏதாவது உருப்படியா யோசிங்க பாஸு.

எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது. எப்படி இந்த பிரச்சனை தீர்ப்பது. ஈழ தமிழர்களின் பிரச்சனை எப்படி முடிவுக்கு வரும். ஈழ மக்கள் சுதந்திர காற்றை சுவாசிப்பது எப்போது???


வருத்தங்களுடன்
இதயமுள்ள ஒரு சாதாரண மனிதன்.

10 comments:

Anonymous said...

தமிழீழப் போராட்டத்தை இன்னும் தெளிவாகப் புரியுங்கள்.

தமிழர் மீது அடக்குமுறையால் புலிகள் உருவாகினார்களா?
த‌மிழ‌ர் போராட்ட‌த்தால் அர‌சு போரை ந‌ட‌த்துகின்ற‌தா?

ஒரு ஈழ‌த் த‌மிழ‌ன்

Anonymous said...

தங்கள் உணர்வு புரிந்து கொள்ளகூடியதே.
//விடுதலை புலிகளை ஈழ மக்களின் ரட்சகனாக நினைக்கலாம். //
அப்படி நினைப்பது மிவும் தவறு.

Anonymous said...

I completely agree with this article. Tamil people should understand that LTTE cannot get freedom to Tamil Eelam people. If we are supporting LTTE, it will dilute the issue; instead we can insist our Indian Govt to involve in this issue and take steps thru dialogue with Srilankan govt to protect Tamil Eelam people. This cud be a positive, practical approach.

Anonymous said...

Do you feel our pain?. you won't you are a selfish indian

சிக்கிமுக்கி said...

இலங்கையின் வரலாற்றைத் தொடக்கம் முதல் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தந்தை செல்வாவின் முயற்சிகளுக்குச் சிங்களர் எத்தகைய மதிப்பளித்தார்கள்?

1983இல் தமிழன் கறி கிடைக்கும் என்று அறிவித்து கறிக்கடை நடத்திய கொடுமை எந்த நாட்டில் நடந்தது?

சூலுற்ற தமிழ்ப் பெண்ணின் வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுத்து வீசி எறிந்தது போன்ற கொடுமைகள் உலகில் வேறு எங்கு நடந்தன?

தன்னிச்சையாகப் போர்நிறுத்தத்தை மீறிக் கோயில், திருச்சவை, பள்ளிவாசல், மருத்துவமனை, பள்ளிக்கூடம், உறவுகளிழந்த சிறுமியர் இல்லம் எல்லாம் தொடர்ந்து குண்டுவீசிக் கொல்லும் கொடுமை உலகில் எங்கெங்கு நடந்தன?

இந்திராகாந்தியைக் கொன்ற சீக்கீய இனத்திலிருந்து ஒருவர் இந்தியாவின் தலைமை அமைச்சராகிறார்.

காந்தியைக் கொன்ற கோட்சே இனத்தவரும் அவர் சார்ந்த அமைப்பின் வழிவந்த கட்சி்யும் இந்தியாவையே ஆள முடிகிறது.

இலங்கை அரசு இனப்படுகொலை செய்வதாக இந்திராகாந்தி நாடாளுமன்றத்திலேயே கூறி எச்சரித்தார்.

வேறுபல நாடுகளும் இலங்கையின் இன ஒடுக்கல் கொடுமைகளையும் மாந்த உரிமைகள் அங்கு நசுக்கப்படுவதையும் எடுத்துக் கூறியுள்ளன..

ஈழத் தமிழரை வேறுநாட்டைச்சேர்ந்தவர் என்று கூறி ஒதுக்கிவிட இயலாது.

மொழியால், இனத்தால், பண்பாட்டால், குருதியால், சொந்த உறவுமுறைத் தொடர்பால் வரலாற்றில் தொடக்கம் முதலே பின்னிப் பிணைந்து கட்டுண்டவர்கள்.

கடல்கோள்களே இவர்கள் வாழும் பகுதிகளை முதலில் பிரித்தன.

ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு எதாராகப் பல்வேறு பொய்ச்செய்திகள் அடக்குமுறையாளர்களாலும் அவர்கள் வீசும் எலும்புத் துண்டுக்குக் காத்திருப் போராலும் பரப்பப் படும்; இவை எல்லாம் வரலாற்றில் காணப்படும் செய்திகளே.

விடுதலைப் போராட்டத்தின் போது சில விரும்பத் தகாத நிகழ்ச்சிகளும் கூட நிகழ்ந்து விடலாம். பல்வேறு உலக நாடுகளின் வரலாறு இச் செய்திகளைக் கூறுகின்றன.

வங்கதேச விடுவிப்பில் பாக்கித்தான் நாட்டின் உள்நாட்டுச்சிக்கல் என்றா பார்த்தோம்?

தென்ஆப்பிரிக்காவில் விடுதலைக்காகக் கருவியேந்தி போராடியோருக்கும், ஆப்கானித்தானத்திற்கும் பாலத்தீனத்திற்கும் துணையாக இருந்ததில்லையா?

தமிழன் எனபதாலேயே எல்லா ஞாயங்களும் சட்டங்களு்ம் நெறிமுறைகளும் கட்டுத்திட்டங்களும் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கற்றுத்தரப் படுகின்றன, அல்லவா?

இவற்றை எல்லாம் சிந்திக்க வேண்டாவா?

என் குருதிச்சொந்தம், என் தங்கை தமக்கையர், அண்ணன் தம்பிகள், பாட்டன் பாட்டிகள் சொல்லொணாக் கொடுமைகளுக் காளாக்கப் படுகின்றனர்.
கொன்று குவிக்கப்படுகின்றனர்.

இடையில் ஓர் இருபதுகல் நீர்ப்பரப்பு இருப்பதால், எங்களை வாய்மூடி கண்புதைத்து காதடைத்து மூளை மழுங்கிக்கிடக்க வேண்டுமெனக் கூற எதனைப் பொய் ஞாயங்கள், சட்டங்கள், அறிவுறுத்தல்கள்!

தமிழிளைஞர் சிந்திக்க வேண்டும்!

Anonymous said...

அப்பட்டமான ஒரு பிதற்றல்.. ஈழ மக்கள் ஏன் போராட துணிந்தார்கள்.இவ்வளவு இளப்பையும் கண்டும் ஏன் போராடுகிறார்கள் என்பதை அறியாத ஒரு பாமரனின் அறிக்கை இது..

இவர் சொல்வது உண்மை எனில், பல காலமாக எந்த ஒரு நாட்டின் உதவியும் இல்லாமல் தொடர்ந்து போராடும் புலிகளால் உலகின் தலை சிறந்தவர்களாக இருக்க முடிகிறத்து என்பதுக்கு பதில் வேண்டும். இலங்கை அரசின் ஆதரவு பெற்ற குழுக்களால் ஏன் புலிகளின் நிலையை தக்கவைக்க முடியவில்லை என்பதுக்காவது பதில் தெரிந்து கொள்ள வேண்டும்.

புலிகள் தமிழ் மக்களின் பின் பலத்தோடு மட்டும்தான் போராடுகிறார்கள் எனும் உண்மை தெரிய கிணத்தில் இருந்து வெளியில் தவளைகள் வர வேண்டும்...

இளங்கோ said...

நான் என்ன சொன்னேன் என்று புரியவில்லையா உங்களுக்கு.

இந்த இந்திய அரசியல்வாதிகளை இன்னுமா நீங்க நம்புறீங்க.???
விடுதலை புலிகள் உருவாக, இலங்கை அரசின் இன படுகொலையே காரணம் என்பதை ஒத்து கொள்கிறேன். இதைத்தான் இவ்ளோ பெரிசா நான் சொன்னேன். மேலும் விடுதலை புலிகளை தீவிரவாத கூட்டம் என்று உலக நாடுகள் சொல்லிவிட்ட பின், எந்த நாடும் உதவி செய்ய யோசிக்கும்.

மாத்தி மாத்தி குறைகள் சொல்வதை விட்டுவிட்டு, வேற எதையாவது உருப்படியா யோசிக்கதானே சொன்னேன்.

Anonymous said...

இந்தியா உதவா விட்டாலும்,முதுகில் குத்தாமல் இருந்தால் போதும்.

Unknown said...

அறிவு ஜீவியே வாழ்க (நீ மட்டும்)

நன்றி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//இந்தமாதிரி பதிவு போடுவதற்கு பதில், ஏதாவது உருப்படியா யோசிங்க பாஸு.//

திரு இளங்கோ ஐயா!
மத்தவங்களை யோசிக்கச் சொல்கிறீர்களே. அவர்கள் யோசித்துப் பார்த்து விட்டுதான் பதிவு போட்டிருக்கிறார்கள். நீங்கள் உங்களுடைய உருப்படியான யோசனையை தெரிவிக்காமல் விட்டால் எப்படி? மற்றவர்களை உருப்படியா செய்யுங்கப்பா என்கிறபோது உங்க உருப்படி என்னன்னு எங்களுக்கும் பார்க்க ஆசையா இருக்கு சொல்லுங்க சார். என்ன செய்யச் சொல்கிறீர்கள் விளக்கமா சொல்லுங்க.